இதில் பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை பதிவை காணலாம்.
சமூகத்தில் பெண்கள் தலை நிமிர்ந்து நடக்கவும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் கல்வி பெண்களுக்கு மிக அவசியம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை
- பெண் கல்வி முக்கியத்துவம்
- Pen Kalvi Mukkiyathuvam Katturai In Tamil
பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பெண்கல்வியும் சமத்துவம்
- பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும்
- பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் கல்வி சுதந்திரம் இன்மையும்
- இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு
- முடிவுரை
முன்னுரை
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பாடுகிறார் பாரதி. அதாவது ஆண்களுக்கு பெண்கள் குறைவில்லை.
பெண்களும் இங்கே கல்வி கற்று நமது சமூகத்தை தலைநிமிர செய்ய வேண்டும் என்பது பாரதியின் கனவு. ஒரு சமூகத்தில் பெண்கல்வி மறுக்கப்படுகின்றதென்றால் அங்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளும் சமூக கொடுமைகளும் தலை தூக்கும்.
பெண்களும் நம்மை போல் சக மனிதர்களே அவர்களும் கல்வி கற்று மேலுயர்ந்து பணியாற்றுவதனால் இச்சமூகத்தில் பாலின சமத்துவம் நிலவும் அச்சமூகமும் முற்போக்குடையதாக கருதப்படும். இதற்கு இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதிக்கும் பெண்களே இதற்கு சாட்சி.
இக்கட்டுரையில் பெண் கல்வி முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.
பெண்கல்வியும் சமத்துவமும்
“ஞானம் நல்லறம் வரும் சுதந்திரம் நற்குடி பிறப்பு” என்று புதுமை பெண்களுக்கான இலக்கணம் வகுக்கிறார் பாரதியார்.
அதாவது ஒரு சமூகத்தில் பெண்கள் அடக்கியொடுக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்ட காலம் போய் இன்றைக்கு பெண்கள் சமமாக கல்வி பயில்கின்றனர். வேலை பார்க்கின்றனர். குடும்பத்தை நிர்வகிக்கின்றனர்.
நமது சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்க தொடங்கியதன் பின்னரே நமது சமூகத்தில் சமத்துவம் வளர ஆரம்பித்தது. இது இல்லாதவிடத்து பெண்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டியிருந்தமையால் பெண்களுக்கான கல்வியோ சமூக அங்கீகாரமோ கிடைக்கவில்லை.
இன்றைக்கு பெண்கள் பல துறைகளிலும் சாதிக்கின்றனர் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தொழில்நிறுவனங்கள் எல்லாவற்றிலும் பெண்கள் சாதிக்க பெண்கல்வி வளர்ச்சியடைந்தமையே காரணமாக இருக்கிறது.
பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கையும்
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் அந்த மாதர் அறிவினை கெடுத்தான்” என்று பாடுகிறார் பாரதியார்.
பெண்கள் இயல்பிலேயே சிறப்புடையவர்கள். இந்த உலகத்தின் உயிர்களை சிருஸ்டிக்கும் பெண் எமது சமூகத்தில் போற்றப்பட வேண்டியவர்கள். இயல்பாகவே அறிவும் மனவலிமையும் மிக்க பெண்கள் சில மூடநம்பிக்கை மிக்கவர்களால் அடக்கப்படுகிறார்கள்.
பெண்கள் கல்வி கற்க கூடாதென கூறி அவர்களை சிறுவயதில் திருமணம் செய்து வைத்தல், கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏற செய்தல், பெண்கள் வீட்டை தாண்டி வெளியில் செல்லவே முடியாத அளவுக்கு அடக்குமுறைகள் காணப்பட்டன.
இதனை மீறும் பெண்களை சமூகத்தில் தவறானவர்களாக காட்டி தண்டிக்கும் வழக்கம் அக்கால சமூகத்திற்கு இருந்தது. இதனால் பெண்கள் தமது கனவுகளை தொலைத்து தமது ஆசைகளை தொலைத்து காலமுள்ளவரை கண்ணீரில் உழன்றனர்.
இன்றைக்கும் சில சமுதாயங்களில் பெண்கள் கல்வி கற்பதை அதிகம் விரும்பாத மக்கள் உள்ளனர்.
பெண்களுக்கெதிரான வன்முறை, பாலியல்கொடுமைகள் இவற்றினை பெண்கள் எதிர்க்காத அளவுக்கு கல்வியறிவின்மையை பயன்படுத்தினர்.
பெண் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பெண்கள் இன்று வன்முறைகளுக்கெதிராக அச்சமின்றி குரல் கொடுத்து வருகின்றனர்.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் கல்வி சுதந்திரம் இன்மையும்
இன்றைக்கு பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் அடக்குமுறை மிக்க சமூகமும் கல்வியறிவு குறைவான தன்மையுமே காரணமாகும்.
வறுமையினை காரணம் காட்டி பெண் பிள்ளைகளை கல்வி கற்க வைக்க பெற்றோர் அனுப்புவதில்லை. பெண்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தவுடன் அவர்கள் கடமை முடிந்ததாக கருதுகின்றனர்.
இதனால் பெண்களிள் கனவுகள் சிதைந்து போகின்றன. திறமையும் அறிவும் இருந்தாலும் கூட பெண்களை விரும்பிய துறையில் செல்ல குடும்பங்கள் அனுமதிப்பதில்லை.
வீடுகளில் இருக்கும் பெண்கள் அதிகம் வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். பிரச்சனைகளுக்கு நியாயம் கேட்குமளவுக்கு தைரியமும் அறிவும் இல்லாமையினாலேயே பெண்கள் அடக்கப்படுகின்றனர்.
இந்நிலமை இன்று கணிசமாக மாறியுள்ளது.
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு
இன்றைய சமுதாயத்தை எடுத்து கொள்வோமானால் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று கூறுமளவுக்கு பெண்கள் கல்வியில் சாதித்து தமக்கு பிடித்த துறைகளில் முன்னேறி சாதித்து வருகின்றனர்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வியல்கல்லூரிகள், மருத்துவதுறை, தாதியர்கள், பொறியியல்துறை, சட்டத்துறை, நிர்வாகத்துறை, அரசியல் துறை, பொருளியல் துறை, விஞ்ஞான துறை, விண்வெளி, ஆசிரிய துறை என அனைத்து துறைகளிலும் பெண்கள் இன்றைக்கு கம்பீரமாக நடைபோடுகிறார்கள்.
இன்றைக்கு உலக தலைவர்கள் வரிசையில் கூட பெண்கள் அதிகமாக உள்ளனர். இன்றைய சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சியும் பங்களிப்பும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
முடிவுரை
“வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிந்தார்” என்று பாடிய பாரதியின் கனவு இன்றைக்கு பலித்திருக்கிறது.
ஒழுக்கம் தவறி நெறி தவறி செல்லாது இச்சமுதாயத்தை கட்டியமைக்க வேண்டிய பங்கு பெண்களுக்கானது. இதை எல்லோரும் புரிந்து கொண்டு நடப்பதனால் சமூக நல்லிணக்கம் உருவாகி சமுதாய அபிவிருத்தியானது உருவாகும்.
You May Also Like: