எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ்

Enathu Kanavu Palli Katturai In Tamil

இந்த பதிவில் எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ் தொகுப்பை காணலாம்.

அறிவை போதிக்கும் ஒழுக்கத்தை கற்பிக்கும் புனிதனமான இடம் தான் பாடசாலை.

பாடசாலைகள் மாணவர்கள் விருப்பும் படி மாணவர்களே விரும்பி வருவது போல இருக்க வேண்டும்.

  • எனது கனவு பள்ளி கட்டுரை
  • Enathu Kanavu Palli Katturai In Tamil
கல்வியின் சிறப்பு கட்டுரை

எனது கனவு பள்ளி கட்டுரை தமிழ்

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • எனது பள்ளியின் சூழல்
  • வகுப்பறை சூழல்
  • கழிவறை வசதி
  • பொழுதுபோக்கு
  • முடிவுரை

முன்னுரை

நாம் காணும் கனவு ஒரு இலட்சியத்தை அடைவதற்காகவும் நம்மை முன்னேற்ற பாதையில் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும். எனது கனவும் அது போன்றதே.

சமுதாயத்திற்கு நல்ல குடிமக்களை தர வேண்டுமென்றால் அவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும் நற்சிந்தனைகளையும் ஏற்படுத்த வேண்டும். இவற்றை சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

இச்செயலை சரியாக செயற்படுத்தும் பயிற்சிக்கூடம் தான் பள்ளிக்கூடம். மேலும் “நாளைய சமூகம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது.” என்ற விவேகானந்தரின் கருத்துக்கு உயிர் கொடுத்து சிறுவர்களை அதற்காக பயிற்றுவிக்கும் இடமாகவும் பள்ளிக்கூடங்கள் காணப்படுகின்றன.

ஏனெனில் சிறுவர்களுக்கு நல்ல பாதையை காட்டுவது பள்ளிக்கூடம் தான். ஒரு களிமண் எந்த வடிவம் பெற வேண்டுமென்று குயவன் தீர்மானிக்கின்றானோ அதுபோலத்தான் குழந்தைகளை ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர்.

இக்கட்டுரையில் எனது கனவு பள்ளி பற்றி பார்க்கலாம்.

எனது பள்ளியின் சூழல்

எனது பள்ளியின் தோற்றம் இயற்கை சூழ்ந்ததாக இருக்கும் பல்வேறு பழ மரங்களும் பூச்செடிகளும் விதவிதமான பறவைகள், அழகான வண்ணத்துப்பூச்சிகளும் உள்ள கண்கவர் நந்தவனமாக இருக்கும்.

அழகான நிறங்களை உடைய பள்ளி கட்டிடங்களும் பள்ளியின் புகழை பறைசாற்றும் கொடிக்கம்பமும் இருக்கும். எனது பள்ளி வளாகம் உறுதியான சுற்றுச்சுவர்களால் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும். குப்பை கூளங்கள் இன்றி தூய்மையாகவும் இருக்கும்.

வகுப்பறைச் சூழல்

எனது பள்ளியின் வகுப்பறைகள் மாணவர்களின் தரங்களுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும். வகுப்பறைகள் அனைத்தும் நல்ல காற்றோட்டமாகவும் போதிய வெளிச்சம் கிடைக்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டிருக்கும்.

சிறிய வகுப்பு மாணவர்களுக்கான சிறிய வட்ட மேசைகள், நாற்காலிகள் என்பனவும் பெரிய மாணவர்களுக்கான பெரிய மேசைகள், நாற்காலிகள் என்பனவற்றையும் கொண்டிருக்கும்.

சிறு வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளின் சுவர்கள் நாட்காட்டி, மணிக்கூடு, சுவரோவியங்கள், ஓவியக் கதைகள் என்பவற்றை கொண்டிருக்கும். பெரிய மாணவர்களின் வகுப்பறைகளின் சுவர் வரைபடங்கள், தேசப்படங்கள், அறிவியல், விளக்கப்படங்கள், சிந்தனைத்துளிகள் போன்றவற்றால் சூழப்பட்டிருக்கும்.

அனைத்து வகுப்புகளிலும் வகுப்பாசிரியரின் பெயர், மாணவர் எண்ணிக்கை, மாணவர் வருகை என்பன தொடர்பாக காட்சிப்படுத்தப்படும். பாட நேரத்தை அறிவிக்க மணிக்கோபுரம் ஒன்றும் அமைக்கப்படும்.

மேலும் அனைவருக்குமான பொது அறிவித்தல்களை வழங்க கட்டிடங்கள் அனைத்திலும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும்.

கழிவறை வசதி

எனது கனவு பள்ளியில் மாணவர்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமான அளவில் கழிப்பறைகள் அமைக்கப்படும்.

அத்துடன் அவை எப்போதும் தூய்மையானதாக இருக்கும். மாணவர்கள் உபயோகித்த பின் அதை தூய்மைப்படுத்த தேவையான தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்கும். கை கழுவும் இடங்களும் போதுமான அளவில் இருப்பதுடன் எப்பொழுதும் பராமரிப்பில் இருக்கும்.

அத்துடன் கழிப்பறை வெளிப்புற சுவர்களில் கழிப்பறை பயன்படுத்தும் முறை, கை கழுவுவதன் முக்கியத்துவம் போன்ற சுகாதார பழக்க வழக்கங்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பள்ளியில் முழுநேரமும் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் கிடைகக் கூடிய வசதி இருக்கும்.

பொழுதுபோக்கு

எனது கனவு பள்ளியில் கற்றல் செயற்பாடு தவிர்ந்த பொழுதுபோக்கு செயற்பாட்டு கூடங்கள் சிலவும் இருக்கும். நூலகங்கள், உடற்பயிற்சிக்கூடம், அழகியற் கூடம், விளையாட்டு மைதானம் என்பன காணப்படும்.

குறிப்பாக விளையாட்டு மைதானம் பெரியதாகவும் மாணவர்கள் விளையாடும் போது கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாதவாறு புற்களாலும் கடற்கரை மணலாலும் நிரப்பப்பட்டிருக்கும். மாணவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும்.

முடிவுரை

“இனி ஒரு விதி செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” என்ற பாரதியார் பாட்டுக்கு அமைய என் கனவு பள்ளியும் ஒரு புதிய விதி தான்.

எனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நாளைய சமுதாயத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார்கள்.

மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி சமுதாய சிந்தனை உள்ளவர்களாக மாற்றி சிறந்த தேசத்தை உருவாக்கும் பள்ளியாக எனது கனவு பள்ளி இருக்கும் எனக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

You May Also Like:

காலம் பொன் போன்றது கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை