உலகத்திற்கே சமத்துவத்தை விதைக்கும் கணியன் பூங்குன்றனார் பாடிய பாடல் வரியான யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள்: எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே.
- யாதும் ஊரே யாவரும் கேளிர்
- Yaathum Oore Yaavarum Kelir Katturai In Tamil
உடல் நலம் காப்போம் கட்டுரை இங்கே சென்று பாருங்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலகத்தோடு ஒட்டஒழுகல்
- உலகவாழ்வும் சமத்துவமும்
- தமிழர் வாழ்வும் சமத்துவமும்
- முடிவுரை
முன்னுரை
“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று பாடிய கணியன் பூங்குன்றனாரின் வரிகள் உலகத்துக்கே சமத்துவத்தை எடுத்துக்கூறிய மகத்தான வரிகள் ஆகும்.
பிறநாட்டவரும் இவ்வரிகளை பெரிதும் மதிக்கின்றனர் அதாவது “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்பது ஆன்றோர் வாக்கு அதாவது பிறப்பினாலே இப்பூமியில் பிறந்தவர்கள் அனைவரும் சமனாவர்.
வீணாக பிரிவினைகளும் பேதமைகளும் வேண்டாம் என்பது எம் முன்னோர்களின் கருத்தாகும். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் உலக நன்மை கருதி சமத்துவ கருத்துக்களை கூறியதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
இக்கட்டுரையில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல், உலகவாழ்வும் சமத்துவமும் மற்றும் தமிழர் வரலாறும் சமத்துவமும் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.
உலகத்தோடு ஒட்டஒழுகல்
பிற மனிதர்களையும் மதித்து அவர்களுடன் அன்பு பாராட்டி வாழ்வதே சிறப்பு என்பதை வள்ளுவர் “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவில்லாதார்” என்கிறார்.
அதாவது உலகத்தோடு சேர்ந்து ஒழுகும் முறையை அறியாதவர்கள் பல நூல்களை கற்றும் அறிவில்லாதவர்களே ஆவர் என சொல்லப்படுகிறது.
நாம் என்னதான் பெரிதாக கற்றிருக்கலாம், உயர்பதவிகளில் இருக்கலாம், வசதிபடைத்தவராக இருக்கலாம் ஆனால் நாம் பிறமனிதர்களை மதிக்காது விட்டால் அது இழுக்காகும்.
நாம் மட்டுமே வாழ்வதன் பெயரல்ல வாழ்க்கை மற்றவர்களையும் வாழவைத்து அழகு பார்ப்பதே வாழ்க்கையாகும். இதனை “வாழு வாழவிடு” என்பார்கள்.
இவ்வாறு நாம் சுயநலமின்றி பொதுநலத்தோடு வாழும் வாழ்க்கை அர்த்தமுடையதாகும். நாம் இறந்தாலும் பிறர் மனங்களில் வாழ்வோம் என்பது சான்றோர் கருத்து.
உலக வாழ்வும் சமத்துவமும்
நாம் வாழ்கின்ற வாழ்க்கை நிலையற்றது இதனை “நீர் வழிப்படும் புனை போலாருயிர் முறை வழிபடும் என்பது திறவே” என்கிறார் கணியன் பூங்குன்றனார்.
ஆற்றிலே ஓடும் ஓடம் போல தத்தளிப்பது எமது உலக வாழ்க்கை என்றோ ஒரு நாள் மரணம் நிச்சயம் ஆக வாழும் காலத்தில் பிறருக்கு உதவுதல், இன்சொல் பேசுதல், அடுத்தவரையும் மகிழ்ச்சிபடுத்தி பார்த்தல் இது போன்றனவே எம் வாழ்வை அழகாக்கும்.
இன்றைய உலகில் கொரோனாவின் தாக்கத்தால் பல்லாயிரம் உயிர்கள் இறந்து கொண்டிருக்கின்றன.
அங்கே களத்தில் வைத்தியர்கள் பாரபட்சமின்றி உயிர்களை காப்பாற்ற தம்முயிரை பணயம் வைத்து எமக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதுவே மனித மாண்பு உயரிய தியாகம் இன்று மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்த்தாபனமும் வளமுள்ள நாடுகளும் உதவுகின்றன. பிறமக்களுக்காக பிரார்த்திக்கிறார்கள்.
இதுவே மனிதம் இதுவே யாதும் நம் மக்களே என்ற கருத்தியலாகும்
தமிழர் வாழ்வும் சமத்துவமும்
தமிழர்கள் காலம் காலமாகவே சமத்துவம் சகோதரத்துவம் என்ற கோட்பாடுடையவர்களாக வாழ்ந்து உலகத்தவற்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.
பசியினால் வாடுவோருக்கு உணவளித்து காக்கும் அன்னதானம் வழங்கல், தண்ணீர்பந்தல் அமைத்து தாகம் தீர்த்தல், ஆதரவற்றோரை ஆதரிக்கும் இல்லங்கள் என பல விடயங்களை தமிழர்கள் தம் வாழ்வியலில் கடைப்பிடித்துள்ளனர்.
இதனை பல இலக்கிய ஆதாரங்களும் தமிழர்களின் பண்டிகைகளும் எடுத்து கூறும்.
சங்கமருவிய காலத்தில் எழுந்த மணிமேகலை இலக்கியமானது உலக மக்களில் ஆதரவற்றோர் வறுமையில் வாடுவோருக்கு உணவளித்து வாழ்விடமளித்து காப்பதே மிகச்சிறந்த அறம் என்று போதிக்கிறது.
முடிவுரை
இன்றைக்கு உலகம் நவீனத்துவம் பெற்றாலும் உலகமக்களிடையே ஒற்றுமையும் புரிதலும் குறைந்து மதம் இனம் சார்ந்த முரண்பாடுகள் அதிகரித்து உலகமெங்கும் வன்முறை பிரச்சனைகளும் தலைதூக்கி வருகின்றது.
இயற்கையை அழிப்பதனால் இயற்கை வளங்களுக்காக நாடுகள் போரிட தொடங்கி விட்டன. உலக சமாதானம் எதிர் காலங்களில் பாதிக்கப்படும் அபாயம் வெகுவாக காணப்படுகின்றது.
இக்கால கட்டத்தில் இது எம் அனைவருக்குமான பூமி இதனை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
இங்குள்ள மலைகளையும் நதிகளையும் கடல்களையும் காடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது ஒருமித்து எழுகிறதோ அன்று யாதும் நல்லதாய் அமையும்.
You May Also Like: