மழைநீர் சேகரிப்பு கட்டுரை

Malai Neer Segaripu Katturai In Tamil

ஐம்பூதங்களில் ஒன்றான நீர் பூமிக்கு மிக அவசியம். இந்த பதிவில் மழைநீர் சேகரிப்பு கட்டுரை பதிவை காணலாம்.

மனிதன் இயற்கையை நேசித்து இயற்கையை பாதுகாத்து வாழ வேண்டும். இல்லையென்றால் பல இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்.

  • மழைநீர் சேகரிப்பு கட்டுரை
  • Malai Neer Segaripu Katturai In Tamil

உடல் நலம் காப்போம் கட்டுரை இங்கே சென்று பாருங்கள்.

மழைநீர் சேகரிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இன்றைய வாழ்வும் நீர்தட்டுப்பாடும்
  3. நீர்முகாமைத்துவம் நீர் பாதுகாப்பும்
  4. மழைநீர் சேகரிப்பு
  5. முடிவுரை

முன்னுரை

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு மனிதனுடைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக நீர் உள்ளது. ஏனைய கோள்களுக்கு இல்லாத சிறப்பு எமது பூமியில் நீர் (H2O) இருப்பது தான்.

மழையானது பருவகாலங்களின் அடிப்படையில் மாரி காலத்தில் அதிகளவாக கிடைக்கிறது. இக்காலத்தில் படிவு வீழ்ச்சி அதிகமாக இருக்கும்.

பெய்கின்ற மழையின் ஒரு பகுதி தரைக்கீழ் நீராக ஊடுவடியும் ஏனையவை தரைமேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளை நிரப்பி கடலில் சென்று சேர்வது இயற்கையாகும்.

இன்றைக்கு உலக காலநிலை பெரும் மாற்றமடைந்துள்ளது. மழைவீழ்ச்சி குறைவடைதல் அதனால் ஏற்படும் வறட்சி இதனால் பயிர்ச்செய்கை, குடிநீர் என்பன மோசமாக பாதிக்கபடுகின்றன.

இவற்றை தடுக்க மழைநீரை மழைக்காலங்களில் சேமித்தல் நீரை சிக்கனமாக பாவித்தல் போன்ற முறைகளை உலக நாடுகள் பின்பற்றுகின்றது.

இக்கட்டுரையில் இன்றைய மனித வாழ்க்கையும் நீர்த்தட்டுப்பாடும் நீர்முகாமைத்துவம், நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

மனித வாழ்க்கையும் நீர் தட்டுப்பாடும்.

உலகில் இன்றைக்கு பாரிய இயற்கை அனர்த்தமாக வறட்சி காணப்படுகின்றது. இது மனித வாழ்க்கைக்கு மிகப்பெரும் சவாலாக மாறி வருகிறது. மிகவும் மெதுவாக உலகை ஆக்கிரமித்து வரும் பேரனர்த்தமாகும்.

மழை வீழ்ச்சியின் அளவு குறைவடைதல் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியை தவறாக பயன்படுத்தல் என்ற இரு பெரும் காரணங்கள் நீர்தட்டுப்பாட்டுக்கு அடிப்படை காரணங்களாகும்.

நீர்தட்டுப்பாடு மனிதனுடைய சுகாதாரம், ஆரோக்கியம், பொருளாதாரம் போன்றவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்துகிறது.

வருடமொன்றிற்கு 55 மில்லியன் மக்கள் உலகளவில் வறட்சியால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்த்தாபனம் கண்டறிந்துள்ளது. உலகின் 40 சதவீதமான மக்கள் வறட்சி சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நீர்தட்டுப்பாடு பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

நீர் முகாமைத்துவமும் நீர் பாதுகாப்பும்

இவ்வாறான பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு நீரை பாதுகாப்பது மட்டும் தான்.

கிடைக்கின்ற நீரை அளவாக பயன்படுத்துதல் பெய்கின்ற மழை நீரை வீணாக்காது பூமியில் உள்ள நீர்தேக்கங்களை ஆழமாக்கியும் புனரமைப்பு செய்தும் வீணாக கடலில் கலக்கும் ஆறுகளை தடுத்து அணைகளை உருவாக்கி நீரை சேமிக்கலாம்.

எமது பண்டைய மன்னர்கள் ஒரு துளி நீரையும் வீணாக கடலில் சேர விடக்கூடாது என பாரிய குளங்களை அமைத்தனர். ஆனால் நாமின்று இருக்கின்ற ஏரிகள் குளங்களை மாசடைய செய்து வருகின்றோம்.

அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் கழிவுநீரையும் மீள்சுழற்சி செய்து பயன்படுத்துகின்றன. இஸ்ரேல் தூவல் நீர் மூலமாக பாலைவனத்திலும் பயிர்செய்கிறது. சவுதி அரேபியா கடல்நீரையும் குடிநீராக மாற்றி பாவிக்கிறது.

இவ்வாறு சிலநாடுகள் சிறப்பான நீர் முகாமைத்துவ செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. எங்களுடைய நாடும் இந்த நுட்பங்களை மேற்கொள்வதன் மூலம் நீர் தட்டுப்பாட்டை குறைக்கலாம்.

மழைநீர் சேகரிப்பு

இன்றைக்கு மழைநீரை சேகரிப்பதன் அவசியம் மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. மழைநீர் தூய்மையானது.

மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் வீடுகள் தோறும் உருவாக்கப்பட்டு மழைநீர் வீணாவது தடுக்கப்பட வேண்டும்.

இதனை குடிநீராக தொட்டிகளிலும் தரைக்கீழ் நீராக குளங்கள் மூலமாகவும் சேமிக்க முடியும்.

பெய்கின்ற மழை வீணாக மேற்பரப்பு கழிவுநீராக விரயமாவதை தடுத்து நிலத்துக்குள் ஊடுவடிய செய்தல் மிக அவசியம்.

இதன் வாயிலாக தரைக்கீழ் நீர் மட்டம் உயர்கிறது என்பது விஞ்ஞான ரீதியான உண்மையாகும். ஆகவே மழைநீரினை சேகரிப்போம் நீர் வளம் காப்போம்.

முடிவுரை

தினம் தினம் எம்முடைய பூமியின் நீர் மட்டம் குறைவடைந்து செல்கிறது. நீரினை மனிதனால் உருவாக்க முடியாது. அது இயற்கையின் ஆகச்சிறந்த வரமாகும். இதனை எம்மால் பாதுகாத்து கொள்ள முடியும்.

நீர் கிடைக்கின்ற பிரதான மூலமான மழைநீரை சேமித்தல் நீரை சேமிக்க கூடிய ஆகசிறந்த முறையாகும்.

ஆகவே மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை மக்களுக்கு விழிப்புணர்வூட்டி இழந்து போகின்ற தரைக்கீழ் நீர் வளத்தை பாதுகாப்போம். வரவிருக்கும் வறட்சி அனர்த்தத்தை தடுப்போம்.

You May Also Like:

நோன்பு பற்றிய கட்டுரை

மனித மனம் பொன்மொழிகள்