இதில் ஆசிரியர் பணி கட்டுரை பதிவை காணலாம்.
உலகில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் மற்றவர்களுக்கு அறிவு எனும் வெளிச்சத்தை கொடுக்கும் ஆசிரியர் பணிக்கு தனியிடம் உண்டு.
- ஆசிரியர் பணி கட்டுரை
- Aasiriyar Thinam Katturai In Tamil
விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை
ஆசிரியர் பணி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆசிரிய தொழிலின் மகத்துவம்
- சமூகத்தின் முன்னோடிகள் ஆசிரியர்கள்
- இன்றைய சமூகமும் ஆசிரியர்களும்
- முடிவுரை
முன்னுரை
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று கூறுவார்கள். இந்த உலகில் பிறக்கின்ற மனிதன் கல்வியறிவினை பெறாவிடின் அவன் வாழ்வில் பல நலன்களை அறியாது போகிறான்.
இக்கல்வியறிவனை போதிக்கின்ற ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் ஆவர். “மாதா பிதா குரு தெய்வம்” என்பவர்கள் எமது வாழ்வில் என்றைக்கும் முக்கியமானவர்கள்.
ஒரு மனிதனுக்கு நல்ல தாய், நல்ல தந்தை அமைவதை போல நல்ல குரு அமைய வேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் கல்வி ஞானமே வாழ்க்கையில் அறியாமையை எம்மிடம் இருந்து விரட்டும்.
ஆகவே ஆசிரியர்கள் இந்த சமூகத்தின் முன்னுதாரணமானவர்கள் ஒரு சமுதாயத்தின் வருங்காலமான மாணவர்களை உருவாக்கும் பணியை செய்யும் ஆசிரியர்களின் பணி அளப்பரியதாகும்.
“குரு இல்லாத வித்தை பாழ்” என்று கூறுவார்கள். இக்கட்டுரையில் ஆசிரியர் பணி பற்றி பார்க்கலாம்.
ஆசிரிய தொழிலின் முக்கியத்துவம்
உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் கல்வி போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது. ஏனென்றால் மனிதனை மனிதனாக்குவது கல்வியாகும். இக்கல்வியினை வழங்கும் ஆசிரியர்கள் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.
“மன்னனுக்கு தன் தேசம் அல்லால் சிறப்பில்லை ஆனால் கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று கூறுவார்கள்.
கல்வியறிவு இல்லாத ஒரு சமூகம் ஆக்கபூர்வமான சமூகமாக இருக்காது. பண்புகள், பழக்க வழக்கங்கள், நல்லறிவு, ஞானம் மற்றும் விழுமியங்கள் போன்றனவற்றை இச்சமூகத்துக்கு போதிப்பவர்கள் நல்லாசிரியர்களாகவே இருப்பார்கள்.
“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்கிறார் ஒளவையார். இன்றைக்கு கல்வியின் மதிப்பு நன்றாகவே உணரப்படுகிறது. இதனை வள்ளுவர் “கேடில் விழுச்செல்வம் கல்வி மாந்தர்க்கு மாடல்ல மற்ற பிற” என்று கல்வியின் பெருமையை கூறுகிறார்.
ஒரு சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக இருக்கின்றதென்றால் அதற்கு அர்ப்பணிப்பும் நல்லெண்ணமும் கொண்ட ஆசிரியர்கள் தான் காரணமாக இருக்க முடியும்.
ஆசிரியர்களின் கருணையை பெற்ற மாணவனின் வாழ்க்கை சிறக்கும் என்பது திண்ணம். இருண்டு கிடக்கும் மாணவர்கள் மனதில் ஒளி விளக்காய் அவர்கள் வாழ்க்கையின் ஏணிப்படிகளாய் தம் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே.
எனவே தான் எமது சமூகத்தில் ஆசிரியர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர்.
சமூகத்தின் முன்னோடிகள் ஆசிரியர்கள்
“தாமின் புறுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” என்கிறார் வள்ளுவர்.
அதாவது தாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்பதற்கமைய தாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் தமக்கென வாழாத சமூகத்தின் முன்னோடிகள்.
ஒரு நல்ல ஆசிரியர் பலன் தரும் விருட்சத்தை போல பல மாணவர்களின் அறிவு கண்களை திறந்து அச்சந்ததியை வாழ்வித்த புண்ணியத்தை செய்கின்றார்கள்.
வராலாறுகளில் சிறந்த ஆசிரியர்கள் தமது கல்விபுலமையை நூல்களாக தந்து இன்றைக்கும் எம்மோடு வாழ்கின்றார்கள் எனலாம்.
ஒரு மனிதன் இறக்கலாம் அவன் சொல்லி சென்ற கருத்துக்களும் கொள்கைகளும் என்றைக்கும் அச் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்கும்.
உதாரணமக வள்ளுவர், கம்பர், பாரதி என்ற பேராசான்கள் எமக்கு காட்டிய வழி இன்றைக்கும் எமக்கு முன்னோடியாக உள்ளது.
எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடிய அவர்களது அறிவுரைகளும் வழிகாட்டல்களும் நம் அனைவரையும் வழிநடத்தும்.
எனவே இச்சமூகத்தின் ஆக சிறந்த வழிகாட்டிகள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையல்ல.
இன்றைய சமூகமும் ஆசிரியர்கள்
இன்றைக்கு சமூகமும் கல்வி முறைகளும் நாகரகீ மடைந்து விட்டது. ஆசிரியர் மாணவ உறவு முறை மாறிவிட்டது.
முன்பு ஆசிரியர்கள் மாணவர்களை குழந்தைகளாக பாவித்தனர் மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பெருமதிப்பளித்து பயபக்தியுடன் கல்வி பயின்றனர். இதனால் அக்காலத்து கல்வியும் மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது.
அவர்கள் மாணவர்கள் மீது கண்டிப்பாகவும் கரிசனையாகவும் இருந்தனர். இதனால் மாணவர்கள் கல்வியையும் ஒழுக்கத்தையும் நன்றாக கற்று கொண்டனர். ஒழுக்கமான சமுதாயமாக இருந்தது.
ஆனால் இன்றைக்கு கல்விசமூகம் மாணவர்களை மையப்படுத்திய சுயகற்றல் மாணவர்கள் சுதந்திரம் மையப்படுத்தப்பட்ட கல்வியாக இருப்பதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான மரியாதை, பயம் குறைவடைந்து விட்டது.
அவர்கள் தவறான பாதையில் செல்ல தொடங்கியுள்ளனர். இது சீர்கேடான சமூக கலாச்சாரத்துக்கு வித்திடுவது வெளிப்படையான உண்மையாகும்.
முடிவுரை
வாழ்வின் எல்லா சந்தர்பங்களிலும் நமது உந்துதலாக ஆற்றலாக திறனாக ஒரு நல்லாசிரியர் என்றைக்கும் இருப்பார்.
வழி தவறிப்போன வழிப்போக்கனுக்கு வழியறிவித்து கரையேற்றும் அந்த ஆசிரியர்கள் என்றைக்கும் நினைத்து பார்க்க வேண்டியவர்கள். இன்றைக்கு பணம் பார்க்கும் தொழிலாக கல்வியும் ஆசிரிய தொழிலும் மாறி வருகின்றது.
ஒரு சிலர் ஆசிரிய தொழிலின் மகிமை அறியாது அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த முறை மாறவேண்டும் நல்ல ஆசிரியர்கள் உருவாகி இந்த சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது எனது அவா.
You May Also Like: