நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

Neerin Mukkiyathuvam Katturai In Tamil

இந்த பதிவில் நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

இந்த உலகிற்கு நீர் என்பது மிக முக்கியமான ஒன்று. நீரின்றி மனிதர்களால் மட்டுமின்றி பிற உயிரினங்களாலும், மரங்கள், செடிகள், கொடிகளாலும் உயிர் வாழ முடியாது.

  • நீரின் முக்கியத்துவம்
  • Neerin Mukkiyathuvam Katturai In Tamil
காடுகளின் பயன்கள் கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நீர் ஆதாரங்கள்
  3. நீரின் முக்கியத்துவம்
  4. நீர் மாசடையும் வழிகள்
  5. நீர் மாசடைதலை தடுக்கும் முறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

நீரின்றி அமையாது உலகு” என்பது சான்றோர் கருத்து ஆகும். நீரினை தன்னகத்தே கொண்டமையால் நீலக்கோள் எனப் பெயர் பெற்ற பூமியானது நீரினை முக்கியமான ஒரு மூலப் பொருளாகக் கொண்டு இயங்குகின்றது.

பூமியின் மேற்பரப்பில் 79 சதவீதம் நீர் இருந்தாலும் கூட அவற்றில் நூற்றிற்கு 3 சதவிகிதம் மட்டுமே நன்னீராக காணப்படுகின்றது. இருக்கின்ற நன்னீரில் மிக சொற்பமான அளவே மனித பயன்பாட்டிற்காக பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளது.

ஏனையவை துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டியாக உறைந்து போயுள்ளன. நீரானது ஏனைய வேதிப்பொருட்களை போலல்லாது மிகுந்த வேறுபாடு உடையது. ஏனெனில் இது தனக்கென தனிப்பட்ட நிறத்தையோ தனிப்பட்ட சுவையோ கொண்டிருப்பதில்லை.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

வானிலும் நிலத்திலும் ஒரு பங்காக காணப்படும் நீரின் முக்கியத்துவம் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

நீர் ஆதாரங்கள்

உலகின் செயற்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகின்ற இந்த நீரானது பல வழிகளின் மூலமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக விளங்குகின்றது.

நன்னீருக்கான மிகப்பெரிய மூலமாக மழை விளங்குகின்றது. புவி மேற்பரப்பிலுள்ள உவர்நீர், நன்னீர் என்பன சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேலே சென்று ஒடுங்கி மழையாக மாறி பூமிக்கு நன்னீரை அளிக்கின்றது.

இதைப்போல உயர் மலைப்பிரதேசங்களில் உருவாகும் நீர்ச்சுனைகள், நீரூற்றுகள் மற்றும் அதனால் தாழ் நிலங்களை நோக்கி உருவாகி ஓடி வருகின்ற நதிகள் என்பனவும் பிரதான நீர் ஆதாரங்களாக காணப்படுகின்றன.

மழை மூலமாக கிடைக்கப் பெறுகின்ற நீரானது வடிநிலங்களில் வழிந்து ஏரிகளை சென்றடையும். அவை நீரை அதிக காலம் தேக்கி வைக்கக்கூடிய திறன் படைத்தவையாக காணப்படுகின்றன.

அவற்றைப் போல இயற்கையாக மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட குளங்களும் நீர் ஆதாரங்களாக காணப்படுகின்றன.

மனிதன் நீரைப் பெற்றுக்கொள்ள உருவாக்கியவையாக கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

அத்துடன் மழைநீரை தொட்டிகளில் சேமித்து வைப்பதன் மூலம் அதனை பயன்பாட்டிற்காகவும் பெற்றுக் கொள்ளலாம்.

நீரின் முக்கியத்துவம்

மேற்குறிப்பிட்டவாறு பல வழிமுறைகளில் கிடைக்கப் பெறுகின்ற நீரானது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. சொல்லப்போனால் உலகம் எனும் சக்கரம் சுழல அச்சாணியாக காணப்படுகின்றது.

ஒரு மனிதன் உயிர்வாழ அவனுக்கு அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு நாளைக்கு குறைந்தது 20 தொடக்கம் 30 லிட்டர் வரையிலான நீர் தேவைப்படுகின்றது. அத்தியாவசிய தேவை என்கிறபோது குடித்தல், குளித்தல், உணவு சமைத்தல், ஏனைய வீட்டு தேவைகள் என்பவற்றை குறிப்பிடலாம்.

மனிதனுடைய உடலில் நீர் மூலக்கூறானது 70 சதவிகிதமாக காணப்படுகிறது. இதுதவிர உலகிற்கு உணவளிக்கும் உழைப்பான விவசாயத்திற்கு அத்தியாவசியமாகவும் நீரானது காணப்படுகின்றது.

அத்துடன் மனித வாழ்க்கையைப் போன்று ஏனைய ஜீவராசிகளின் நிலைத்திருப்பான வாழ்க்கைக்கும் நீர் அவசியமாக காணப்படுகின்றது. மேலும் நீர்வழிப் போக்குவரத்து, மீன்பிடி மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கும் நீர் முக்கியமானதாகும்.

கைத்தொழிற்சாலைகளில் முக்கியமான மூலப் பொருளாகவும் நீர் விளங்குகின்றது. அத்துடன் மனிதனுக்கு தேவையான மின்சார சக்தியை உருவாக்குவதற்கும் நீரானது தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

நீர் மாசடையும் வழிகள்

உலகானது நிலைத்து நிற்க ஊன்று கோலாக அமையும் நீரானது பல செயற்பாடுகள் மூலமாக மாசடைவிற்கு உள்ளாகின்றது.

உதாரணமாக கைத்தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீரானது நீர்நிலைகளில் வெளியேற்றப்படுதல், நகரக் கழிவுகள் வடிகால் அமைப்புகள் மூலம் ஆறு, குளம், ஏரி போன்றவற்றில் கலத்தல்.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அசேதனப் பொருட்கள் நீர்நிலைகளில் கலத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

நீர் மாசடைதலை தடுக்கும் வழிமுறைகள்

நீரானது மாசடைதலை தடுக்கும் வழிமுறைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். தொழிற்சாலைகள் மற்றும் நகரக் கழிவுகளை நீர் நிலைகளில் கலக்க விடாமல் மீள்சுழற்சிக்கு உட்படுத்தல்,

விவசாய நடவடிக்கைகளில் சேதனப் பொருள் பயன்பாட்டை ஊக்குவித்தல், முறையான கழிவகற்றல் செயன்முறைகளை நடைமுறைப்படுத்தல்,

மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தல், நீர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தல் ஆகியவையாகும்.

முடிவுரை

“நாம் வாழ நீர் வேண்டும். நீர் காண மழை வேண்டும்” என்ற முன்னோர் கருத்துக்கு அமைவாக நீரைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

எனவே மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். பெறும் மழை நீரை சேமிப்பது மட்டுமன்றி சிக்கனமாக பாவிப்பதன் மூலம் நீர் வளத்தை பேணி பாதுகாப்போம்.

You May Also Like:

உலக வெப்பமயமாதல் கட்டுரை

நீர் மேலாண்மை கட்டுரை