கருணை பற்றிய கட்டுரை

Karunai Katturai In Tamil

இந்த பதிவில் “கருணை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய போட்டி உலகில் ஒருவர் மீதான போட்டியும் வெறுப்பும் அதிகரித்து செல்கின்றது இது ஆரோக்கியமானது அல்ல. நாம் அனைவரும் கருணை எனும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கருணை பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. கருணை என்றால் என்ன?
  3. கருணையின் அவசியம்
  4. கருணை உள்ளம் கொண்டவர்கள்
  5. கருணை இல்லாதவர் வாழ்க்கை
  6. முடிவுரை

முன்னுரை

மனிதக் குணங்களில் சிறப்பான குணமாகக் கருணை காணப்படுகின்றது. இதன் பொருள் ஒருவர் துயரத்தில் இருக்கும் போது அவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கிறது.

அரிஸ்ரோட்டில் அவர்கள் “தேவைக்கு ஏற்றவாறு உதவும்⸴ உதவி பெறுபவர் நன்மையைக் கருதி செய்வதும் கருணைˮ எனக் கூறுகின்றார்.

கருணையே இறைவனை அடையும் எளிய வழியாகும். உலகம் கருணையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. கருணை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கருணை என்றால் என்ன?

கருணையென்பது நமக்குள் இருக்கும் ஓர் உன்னத உணர்வாகும். கடினமான வாழ்க்கைச் சூழலிலிருக்கும்⸴ மற்றும் உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவும் ஆசையாகும்.

கருணையென்பது ஒரு எண்ணம்⸴ உணர்வு⸴ நம்பிக்கை அதனால் நமக்கும் பிறருக்கும் நன்மை கிடைக்கின்றது. பசியால் வாடும் ஒருவருக்கு உணவளிப்பது⸴ ஏழைக்கு உதவுவது⸴ வலியால் துடிப்பவனைத் தேற்றுவது⸴ தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பது முதலானவற்றின் மூலம் கருணை வெளிப்படுகின்றது.

கருணையின் அவசியம்

உலகின் நிலை பேற்றிற்கு கருணை அவசியமாகின்றது. உயிர்களிடத்தில் அன்பு செலுத்தவும் உதவி செய்யவும் கருணை அவசியமாகும். இன்றைய நவீன உலகின் மிகமிகத் தேவைப்பாடான ஒன்றாகும்.

உலகம் இன்று சுயநல வாழ்க்கைக்கு மாறிக் கொண்டிருக்கின்றது. போட்டி, பொறாமை, துரோகமென தீய குணங்களை அதிகம் வளர்த்துக் கொள்வதை சமுதாயத்தில் காணமுடிகின்றது. இதனை ஒழிக்கக் கருணை முக்கியம். மனிதப் பிறப்பின் பயனையும்⸴ அர்த்தத்தையும் காண கருணை அவசியம்.

கருணை உள்ளம் கொண்டவர்கள்

உலகில் நம் கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ பேர் கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழ்கின்றனர். இருப்பினும் எம் வாழ்வில் குறிப்பிட்டுக் கூற முடிகின்றளவு நம்மைப் பெற்ற தாய் தகப்பன் இருவருமே நாம் கண்ட முதற் கருணை உள்ளம் கொண்டவர்களாவர்.

அன்போடும் பாதுகாப்போடும் தன்னலம் கருதாது துன்பங்களைக் களைந்து இன்பத்தையளிக்கும் உன்னதமானவர்கள். வரலாற்றில் உயர்ந்த இடத்தை பெறுபவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களே.

கருணையின் வடிவாக உலகம் அறிந்தவர்களில் அன்னை தெரசாவும் ஒருவர் இவர் மட்டுமன்றி சிறந்த கொடை வள்ளலான கர்ணன்⸴ புறாவிற்காகத் தன் உடலை வெட்டிக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி⸴ முல்லா⸴ மகாத்மா காந்தி என வரலாற்று நெடுகிலும் பல கருணை உள்ளம் கொண்டவர்களைக் காணலாம்.

கருணை இல்லாதவர் வாழ்க்கை

“பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்
அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்ˮ

இக்குறளில் வள்ளுவர் கூறியது யாதெனில்⸴ கருணையே இல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீது கொடுமைகளைத் தணிக்க கூடியவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்தவர்களாகின்றனர் என்கின்றார். இவர்களது வாழ்க்கை மகிழ்வற்றதாகவே காணப்படும். ஏனெனில் பிறர் மகிழ்வில் தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

எனவே கருணை இல்லாதவர்களிடம் கருணை வரும்போதுதான் அவர்கள் வாழ்க்கை அர்த்தமாகும்.

முடிவுரை

நவீன உலகில் மிகப் பற்றாக்குறையாகக் காணப்படுவது கருணையே. எனினும் இன்னும் உலகில் அன்புள்ளங்கள் வாழ்வதால் தான் உலகம் இயங்குகின்றது.

இதனையே “இவ்வுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழைˮ என்றார் ஔவையார். எனவே கருணை உள்ளம் கொள்வோம் காலத்தை வெல்வோம்.

சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்