இந்த பதிவில் உணவே மருந்து கட்டுரை பதிவை காணலாம்.
உண்ணும் உணவும் உணவு பழக்கவழக்கங்களுமே உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியதாக இருக்கின்றது.
இயற்கை உணவு முறையினையும் இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தையும் உள நலத்தையும் பாதுகாக்க முடியும்.
- உணவே மருந்து
- Unave Marunthu Katturai Tamil
நீரின்றி அமையாது உலகு கட்டுரை
உணவே மருந்து கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உணவின் இன்றியமையாமை
- சிறந்த உணவின் தேவை
- சிறந்த உணவு
- சிறந்த உணவுப்பழக்கம்
- முடிவுரை
முன்னுரை
மனிதனது அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் இந்த மூன்றிலும் உணவே மிகவும் முதன்மையானதாக கருதப்படுகின்றது.
இந்த உலகத்திலுள்ள மனிதர்கள், விலங்குகள் உட்பட ஏனைய அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவு மிகவும் அவசியமானது. உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை.
சிறந்த உணவுகளை தகுந்த நேரத்தில் உண்தல் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறையாகும்.
இக்கட்டுரையில் உணவே மருந்து என்பதை விரிவாக பார்க்கலாம்.
உணவின் இன்றியமையாமை
“உண்டி முதற்கே உலகு” என்று நமது முன்னோர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதாவது உணவை அடிப்படையாக வைத்தே இந்த உலகு இயங்குகின்றது. உணவு உடலிற்கு இயக்கசக்தியையும் வலிமையையும் தருகின்றது.
ஒருவர் சரிவர உணவை உட்கொள்ளாது விடின் அவரால் தனது ஏனைய வேலைகளை சரிவர செய்ய இயலாது.
நோய்கள் நம்மை அண்டிவிட்டால் மகிழ்ச்சியாக வாழ இயலாது. நோய்நொடிகள் நம்மை நெருங்காது இருப்பதற்கு நாம் ஆரோக்கியமான உணவை தகுந்த நேரத்திற்கு உண்ண வேண்டும்.
சிறந்த உணவின் தேவை
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” இவ்வாறு உணவின் பெருமையை குறிப்பிடுகின்றார் வள்ளுவர்.
அதாவது நாம் தினமும் உணவு உண்ம் போது எந்த உணவு நம் உடலிற்கு பொருத்தமானது என்பதை தெரிவு செய்து உண்தலே சிறந்த மருந்தாக அமைந்து விடுகின்றது.
நல்ல உணவை எடுத்துக் கொள்ளும் போது எந்தவிதமான நோய் நொடிகளும் நம்மை நெருங்காது. தற்போதைய நவீன உலகில் சரியான உணவை தெரிவு செய்து உண்பது மிகவும் கடினமானது.
இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் யாருக்குமே சத்துக்கள் நிறைந்த உணவை பக்குவமாக சமைத்து உண்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதனால் அனைவருமே துரித உணவுகளை கொள்வனவு செய்வதனையை பெரிதும் விரும்புகின்றார்கள்.
நேரமின்மை பாரிய பிரச்சினையாக இருந்தாலும் நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானவையாக இருந்தால் மாத்திரமே நீண்டகாலத்திற்கு உயிர் வாழ முடியும்.
தற்போது நாம் உண்ணும் காய்கறிகள் இரசாயனம் கலந்தவையாகவும், உணவுகள் கலப்படம் செய்தவையாகவும் மாறியுள்ளன. ஆகவே சுத்தமான ஆரோக்கியமான உணவை தெரிவு செய்வது மிகவும் அவசியம்.
சிறந்த உணவு
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், இறைச்சி, முட்டை மற்றும் கீரை வகைகள் போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்ட உணவுப்பொருட்களை உள்ளடக்க வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் நச்சுத்தன்மை சேராதவையாகவும், சுத்தமானவையாகவும் இருக்கவேண்டும். தற்போது அனைவருக்கும் உள்ள பிரச்சினை யாதெனின் சிறந்த உணவுப் பொருட்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.
ஏனெனில் சந்தையில் கொள்வனவு செய்யப்படும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பானவையா என்பதை அறிந்து கொள்வது கடினம். எனவே நாம் குடியிருக்கும் இடத்திலேயே சிறிய வீட்டுத்தோட்டங்களை அமைத்து நமக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே பயிரிடுவது சிறந்தது.
பொதி செய்யப்பட்ட மீன், இறைச்சி போன்றவற்றை கொள்வனவு செய்யாமல், மீன்களை மீன் சந்தையிலும் இறைச்சிகளை அவை புதிதாக கிடைக்கும் இடங்களிலும் கொள்வனவு செய்வது சிறந்தது.
ஏனெனில் பொதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் நீண்ட காலத்திற்கு பழுதடையாமல் இருப்பதற்காக இரசாயன பொருட்கள் கலக்கப்பட்டே பொதி செய்யப்படுகின்றன. எனவே அவற்றை தவிர்ப்பதே சிறந்ததாகும்.
சிறந்த உணவுப்பழக்கம்
ஒரு மனிதன் ஆரோக்கியமானவனாக வாழ அவன் சிறந்த உணவுப்பழக்கத்தை உடையவனாக இருக்க வேண்டும். ஒரு நாளில் மூன்று வேளைகளும் உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
காலைவேளைகளில் உணவை தவறாமல் எடுத்துக் கொள்வது மிகவும் சுறுசுறுப்பாக ஏனைய வேலைகளை செய்ய உதவும். மதிய உணவு ஒரு முழுமையான உணவாக இருப்பதோடு இரவு உணவு எளிதாக சமிபாடு அடையக்கூடியதாக இருக்கவேண்டும்.
துரித உணவுகளை முழுமையாக தவிர்ப்பது சிறந்தது. அவற்றை உட்கொள்வது குடல் புண், புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தவல்லது.
ஏற்கனவே உண்ட உணவு சமிபாடடைந்த பின்னரே அடுத்த உணவை உண்ண வேண்டும் என தமிழ் மருத்துவம் குறிப்பிடுகின்றது. இதுவே சிறந்த உணவுப் பழக்கமாகும்.
முடிவுரை
எமது உணவுப்பழக்கமானது நாகரீகம், சமூக வளர்ச்சி, வாழ்க்கை தரம் போன்ற காரணிகளால் மாற்றியமையக்கப்படுகின்றது.
மருத்துவ உலகம் எவ்வளவு வளர்ச்சியடைந்து காணப்பட்டாலும் ஆரோக்கியமான உணவை உண்டு நோய் நொடிகள் வருமுன் காப்பதே சிறந்தது.
எனவே சிறந்த உணவு பழக்கத்தை பேணி நீண்ட ஆயுளைப்பெற்று வாழ்வோமாக.
You May Also Like :